Star2. தீவிரவாதம் தின்ற இளைஞன்
சென்ற வருடம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி, தலையில் அடிபட்டு, பெரும் உயிர் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்த அமித் என்ற 21 வயது இளைஞரைப் பற்றியது இப்பதிவு! அவர் கடந்த ஒரு வருடமாகவே சுயநினைவு அற்ற நிலையில் (ஒரு வித கோமா நிலையில்), மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் (வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் இவரைப் போல ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்திருப்பீர்கள்), தனது பெற்றோர் மற்றும் சகோதரரால் பேணப்பட்டு, உடல்நிலையில் முன்னேற்றம் அதிகம் இன்றி, வீல்சேரிலும் படுக்கையிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். விபத்திற்கு முன் ஒரு சிறந்த வாலிபால் ஆட்டக்காரராக இருந்த இவருக்கு, இப்போது மருத்துவமனை அறையே வாழ்க்கையாகி விட்டதற்கு காரணம் தீவிரவாதம் என்ற நம் நாட்டை பிடித்து ஆட்டும் கொடுநோய்!
என்றாவது ஒரு நாள் தன் மகன் பூரண குணமடைந்து விடுவான் என்ற (ஒரு தாய்க்கு மட்டுமே உரிய) முழு நம்பிக்கையில், மீனா சிங் தன் மகனை ஒரு குழந்தையைப் போல் பேணி, அவரது செயலிழந்த / பலம் குன்றிய கை கால்களை தினமும் நீவி, நாள் முழுதும் அவருடனே இருந்து பணிவிடை செய்கிறார். மருத்துவர்கள் அமித்தின் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறி வந்தாலும், அந்த தாய் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து நல்லது நடக்கும் என்று திடமாக நம்புவது நம்மை அசர வைக்கிறது.
அமித்திடம் செயல், பேச்சு எதுவும் இல்லாவிட்டாலும், தாங்கள் பேசுவதை அவன் புரிந்து கொள்கிறான் என்று அமித்தின் குடும்பத்தினர் நம்புகின்றனர். அமித்தின் ஆகாரம் முழுதும் குழாய் வழியாகத் தான். தனது இளைய மகனின் நிலைமையால் மனதளவில் உடைந்து போயிருக்கும் அவனது தந்தை தினேஷ் சிங், அமித் உடல் நிலையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படாதா, அவனுக்கு சுயநினைவு திரும்பாதா என்ற ஆதங்கத்தில், யாரோ பரிந்துரைத்த ஆயுர்வேத எண்ணெயை தினமும் அமித்தை நுகர வைத்துப் பார்க்கிறார்!
ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரியும் அமித்தின் மூத்த சகோதரர், வாரத்தில் 5 நாட்கள், இரவுப் பொழுதுகளை தன் தம்பிக்கு துணையாக மருத்துமனையில் கழித்து வருகிறார். வாரம் ஒரு முறை தான் வீட்டுக்கே செல்கிறார். அந்த குடும்பத்தினரின் வாழ்க்கையே அந்த மருத்துவமனையுடன் பிணைந்து விட்டது. அமித் ஒரு கணம் கூட தனிமையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அக்குடும்பத்தினர் படும் பாடும், அவர்களின் வேதனையும்,வலியும் நம்மை கலங்க வைக்கிறது.
"எங்களுக்குப் பின் யார் அவனை இப்படி பார்த்துக் கொள்வார்கள்" என்று அவனது தந்தை கண்ணில் நீர் மல்க, பரிதாபமாகக் கேட்கும்போதும், அமித்தின் தாய் மீனா, "எங்களுக்கு கடவுள் செய்தது போல், வேறெந்த பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது" என்று கூறும்போதும், அவர்கள் குரலில் தென்படும் கவலையும், சோகமும் நம்மை உருக்குவதாக உள்ளது.
எல்லா நடுத்தர குடும்பங்களை போல, அக்குடும்பத்திற்கும் இருந்த கனவுகள், ஒரு ஜூலை மாத மாலை வேளையில், தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி சிதறடிக்கப்பட்டு விட்டன! ஆனால், அப்பெற்றோர், தீவிரவாதிகள் குறித்தோ, வழக்கு இதுவரை தொடங்காதது பற்றியோ அக்கறை எதுவும் காட்டுவதில்லை. அப்பெற்றோரின் வாழ்வில் மிச்சமிருப்பதெல்லாம், தங்கள் இளைய மகன் ஒரு நாள் உடல் நலம் பெற்று எழுந்து விடுவான் என்ற தளராத நம்பிக்கை மட்டுமே !
நாமும் நம்புவோம், பிரார்த்திப்போம்!
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி: rediff.com
5 மறுமொழிகள்:
Test !
பாலா ஐயா!
தெஹல்கவை படிக்கும் போது ஏற்பட்ட வலியும் வேதனையும் இப்பதிவை படிக்கும் போது மீண்டும் எனக்குள் ஏற்படுகிறது.
கண் இமைக்கும் கணபொழுதுக்குள் வாழ்வினை கண்ணீராக்கி விட்ட கயவர்கள் சண்டாளர்கள் விலங்கினும் கீழானவர்கள் இழிவானவர்கள். இப்பாதகர்களை கூண்டு பிடித்து வேறோடும் வேறடி மண்ணோடும் களைந்தெறிய நமது நாட்டின் உளவு துறையும், காவல்துறையும் என்று தான் செய்ய போகிறார்களோ?
இது போன்ற சம்பவங்கள் நடந்த சில தினங்களுக்கு கண்டணங்கள், நிவாரண தொகை அறிவிப்புகள் என வெத்து வேட்டு கூப்பாடுகள். வெட்கம் கெட்ட மீடியாக்கள் தங்களது பரபரப்பு விறபனைக்காக இல்லாததை எல்லாம் முக்கிய தடயமாக எழுதுவார்கள். அதன் பிறகு அது தடயமே இல்லாத தகவலாய் மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒவ்வொரு நாளும் அணு அணுவாய் சித்திரவழத பட்டு சாகிறார்களே என்பது அமித் விசயத்தில் இருந்த வெளிபடுகிறது. இதயம் கனக்கிறது அனபரே! மனித குல விரோத கும்பல்கள் கூண்டோடு பிடிக்கப்பட்டு, சட்டத்தால் தண்டிக்கபடும் நாளே என்னை பொறுத்தமட்டில் இந்திய தேசத்தின் சுதந்திர தின நாளாகும்.
அன்பு சகோதரர் அமித் இன்னும் அவர் போல் அவதியுறும் ஆயிரக்கணக்கான அப்பாவி சகோதர சகோதரிகளின் வாழ்வில் நல்வாழ்வு வந்திட இறையோனை பிராத்திக்கிறேன்.
வெறுப்பு, விரக்தி வேதனையுடன்
நீதிமான்
நாமும் நம்புவோம், பிரார்த்திப்போம்!
இதைத்தவிர வேறு என்ன சொல்வது.:-(
நேற்று சன் தொலைக்காட்சி செய்தியில் ஒரு தற்கொலை தாக்குதல் காண்பித்த போது என்னவோ செய்தது.
படிக்கும்போதே நெஞ்சம் அடைக்கிறது. 'எந்தத் தவறும் செய்யாத ஒரு ஜீவன் தண்டனையை அனுபவித்ததே, அதற்கு என்ன நஷ்ட ஈடு?' என்று அவர்களின் இறைவன் அவர்களிடம் கேட்கும்போது, சொல்ல என்ன பதில் இருக்கிறது நாசம் விளைவிப்பவர்களிடம்.
சகோதரர் அமித் விரைவில் நலமடைய வேண்டி அவர்களின் உறவினர்கள் மற்றும் உங்களுடன் நானும் பிரார்த்திக்கிறேன்.
வடுவூர் குமார், நீதிமான், சுல்தான்,
தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
எ.அ.பாலா
Post a Comment